h1

NAMBUTHALAI

December 8, 2011

Nambuthalai mosque

Nambuthalai is on of the Village in Tiruvadanai Taluk , Ramanathapuram District , Tamil Nadu State . Nambuthalai is 11.1 km far from its Taluk Main Town Tiruvadanai . Nambuthalai is located 49.7 km distance from its District Main City Ramanathapuram . It is located 393 km distance from its State Main City Chennai .

Other villages in Tiruvadanai Taluk are Andavoorani , Arasathur , Arumboor , Athiyur , Kadambur , Kaliyanagari , … . .

Nambuthalai Pin Code is 623403 and Post office name is . Other villages in ( 623403 , ) are Nambuthalai , Pudupattinam , Mugilthagam , .

Near By Villages of this Village with distance are Mugilthagam(3.7 k.m.) ,Thelur(5.9 k.m.) ,Pudupattinam(7.4 k.m.) ,Kulathur(8.3 k.m.) ,Vattanam(9.7 k.m.) ,. Towns Near By Tiruvadanai(11.1 k.m.) ,Rajasingamangalam(21.5 k.m.) ,Bogalur(48.7 k.m.) ,Ramanathapuram(49 k.m.) ,

h1

Nambuthalai – உள்ளாட்சி தேர்தல் 2011

November 7, 2011

தமிழகம் முழுவதும் 2011 அக்டோபர் மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் நம்புதாளை (Nambuthalai) ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சத்திய சீலன் என்ற வேட்பாளர் தனனை எதிர்த்து களமிறங்கிய தங்கராசு என்ற வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றார்.

சத்தியசீலன்:

இவர் நம்புதாளை (Nambuthalai) வாசிகளின் நல் அபிமானத்தைப் பெற்றவராவார். இவருக்கு இஸ்லாமியர் மத்தியிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இவர் நம்புதாளை (Nambuthalai) மீனவர் சமுதாயத்தைச் சார்ந்தவர் ஆவார். மேலும் நம்புதாளை (Nambuthalai) வாசிகளுக்காக நல்ல பல திட்டங்களை செயல்படுத்துவார் என்று நம்புவோமாக!

h1

குர்ஆனில் விஞ்ஞானம்

October 11, 2011

விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்குதல்

அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் – யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் – இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான். அல்குர்ஆன் 6:125

விண்வெளிப் பயணம் மேற்கொள்பவர்களின் இதயங்கள் சுருங்குவதை மனிதன் இன்று அனுபவப்பூர்வமாக விளங்கியிருக்கிறான்.

ஆனால் இந்த அறிவு 1400 வருடங்களுக்கு முன்னர் எவருக்கும் இருந்ததில்லை. விர்ரென்று மனிதன் மேலேறிச் செல்ல முடியும் என்று அவர்கள் கற்பனை கூட செய்திருக்கமாட்டார்கள்.

இத்தகைய கால கட்டத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொள்பவனின் இதயம் இறுக்கமான நிலையை அடையும் என்று முஹம்மது நபியால் எப்படிக் கூற முடியும்? அன்றைய நிலையில் இது படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். இதிலிருந்து திருக்குர்ஆன் இறைவாக்கு எனச் சந்தேகமின்றி அறியலாம்.

கரு உருவாகுதல் மற்றும் கரு வளர்ச்சி
மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்): மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள் (தரிசாய்க் கிடக்கும்) வறண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது. அல்குர்ஆன் 22:5

பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் – (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். அல்குர்ஆன் 23:14

இவ்வசனத்தில் கருவளர்ச்சியின் பல்வேறு நிலைகளைக் கூறி வரும் பொழுது “பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம்” என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

இது ஆழமான அறிவியல் உண்மையைப் பேசும் சொல்லாகும். ஏனெனில் கருவில் வளர்கின்ற உயிர்கள் சுமார் இரண்டு மூன்று மாதங்கள் அவற்றுக்கான வடிவத்தை பெறுவதில்லை. வெறும் சதைப் பிண்டமாகவே வளரும். பிறகு தான் ஒவ்வொரு உறுப்புகளும் எங்கெங்கே அமைய வேண்டுமோ அங்கே அதற்கான செல்கள் நகர்ந்து வடிவம் உருவாகும்.

இதைத் தான் “பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம்” என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

பால் எவ்வாறு உற்பத்தியாகிறது
நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது; அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம். அல்குர்ஆன் 16:66

உணவுகளில் தலைசிறந்த உணவாகக் கருதப்படும் பால் எவ்வாறு உற்பத்தியாகிறது என்பது மிகப் பிற் காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. பல வருடங்களுக்கு முன்னால் வரை இரத்தம் தான் பாலாக மாறுகிறது என்று நம்பி வந்தனர்.

உண்மையில் இரத்தம் பாலாக ஆவதில்லை. மாறாக உண்ணுகிறன்ற உணவுகள் சிறு குடலுக்குச் சென்று அரைக்கப்பட்டுக் கூழாக இருக்கும் போது அங்குள்ள உறிஞ்சுகள் மூலமாக அதிலிருந்து உறிஞ்சப்படும் சத்துகள் தான் இரத்தமாகவும், இன்னபிற பொருட்களாகவும் மாற்றப்படுகின்றன.

இவ்வாறு உறிஞ்சப்படும் பொருட்களை இரத்தம் இழுத்துச் சென்று பாலை உற்பத்தியாக்கும் மடுக்களில் சேர்க்கிறது. அங்கே பாலாக உருமாகிறது.

அதாவது அரைக்கப்பட்ட உணவுக் கூழுக்கும், இரத்தமாக மாறுகின்ற நிலைக்கும் இடைப்பட்ட பொருளில் இருந்து தான் பால் உற்பத்தியாகிறது என்ற 21ம் நூற்றாண்டு விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை அதே வார்த்தைகளைச் சுற்றி வளைக்காமல் நேரடியாக திருக்குர்ஆன் கூறியிருப்பது, இது மனிதனின் வார்த்தையே அல்ல என்பதற்கும், கடவுளின் வார்தையே என்பதற்கும் மறுக்க முடியாத சான்றாக அமைந்துள்ளது.

இரு கடல்களுக்கிடையே தடுப்பு
அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது – இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். அல்குர்ஆன் 25:53

இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர். அல்குர்ஆன் 27:61

இன்னும் இரண்டு கடல்கள் சமமாகா; ஒன்று மிகவும் இனிமையாக, (தாகம்தீரக்) குடிப்பதற்குச் சுவையாக இருக்கிறது; மற்றொன்று உவர்ப்பாக, கசப்பாக இருக்கிறது. எனினும் இவை ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள் சுவையான (மீன்) மாமிசத்தை உண்ணுகிறீர்கள். இன்னும், (முத்து, பவளம் போன்ற) ஆபரணமாக நீங்கள் அணிவதையும் எடுத்துக் கொள்கிறீர்கள்; மேலும் (அல்லாஹ்வின்) அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக (நீங்கள் பிரயாணம் செய்யும் போது) கப்பல்கள் நீரைப்பிளந்து செல்வதையும் நீங்கள் காண்கிறீர்கள் – இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக! அல்குர்ஆன் 35:12

அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா. அல்குர்ஆன் 55:19-20.

திருக்குர்ஆன் பல இடங்களில் இரண்டு கடல்கள் சங்கமமாகும் இடத்தில் அவ்விரண்டுக்கும் இடையே
ஒரு பலமான தடையையும், தடுப்பையும் ஏற்படுத்தியிருப்பதாகக் கூறுகிறது.

இதை கடல் பற்றி ஆய்வு செய்பவர்கள் ஆராய்ச்சி செய்து இரு கடல்கள் சங்கமமாகும் இடங்களில் இரண்டு தண்ணீரும் சுவையிலும், அடர்த்தியிலும், உப்பின் அளவிலும் வேறுபட்டிருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இது எழுதப் படிக்க தெரியாத முஹம்மது நபிக்கு 14 நூற்றாண்டுகளுக்கு முன் எப்படி தெரியும்?.
எனவே திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதற்கு இதுவும் சான்றாக இருக்கிறது.

அனைத்திலும் ஜோடி
மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து, அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் – நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அல்குர்ஆன் 13:3

“(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்; இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்; மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான்; இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவரவர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்” (என்று இறைவன் கூறுகிறான்). அல்குர்ஆன் 20:53

பூமி முளைப்பிக்கின்ற (புற் பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன். அல்குர்ஆன் 36:36

நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம். அல்குர்ஆன் 51:49

திருக்குர்ஆன் பல வசனங்களில் உயிரினங்களில் மட்டுமின்றி தாவரங்களிலும் ஜோடிகளை அமைத்திருப்பதாகக் குறிப்பிடுகின்றது.

தாவரங்களிலும் ஆண், பெண் உள்ளன என்பது பிற்காலக் கண்டுபிடிப்பாகும்.
தாவரங்களிலும் ஜோடிகள் இருப்பதாக பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறியிருப்பது இது இறைவனின் வார்த்தை என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

மேலும் ஜோடிகளைப் பற்றிக் குறிப்பிடும் சில வசனங்களில் இவர்கள் அறியாமல் இருப்பவற்றிலிருந்தும் ஜோடிகளைப் படைத்திருப்பதாக இறைவன் கூறுகிறான்.

அன்றைய மனிதர்கள் அறியாமல் இருந்த பல ஜோடிகளை இன்றைக்கு மனிதன் கண்டு பிடித்திருக்கிறான். மின்சாரத்தில் பாஸிட்டிவ், நெகட்டிவ் என்ற ஜோடிகள் இருக்கின்றன. அது போல் அணுவில் கூட ஒவ்வொரு அணுவிலும் புரோட்டான், எலக்ட்ரான் என்று ஜோடிகள் இருக்கின்றன. இப்படி மனிதர்கள் அறியாமல் இருக்கின்ற பல விஷயங்களிலும் ஜோடிகளாகவே அமைத்திருப்பதாக இறைவன் குறிப்பிடுவதிலிருந்து இது முஹம்மது நபியின் சொந்த சொல் இல்லை, இறைவனின் வார்த்தை தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.

பெருவெடிப்பு கொள்கை
நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? அல்குர்ஆன் 21:30

இந்த உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பது பற்றி பலவிதமான கட்டுக் கதைகளைத் தான் முந்திய நூல்கள் கூறுகின்றன.

திருக்குர்ஆன் மட்டும் தான் இன்றைய விஞ்ஞானிகள் சொல்கின்ற அதே கருத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறியது. வானம் பூமி எல்லாம் ஓரே பொருளாக இருந்தன. அவற்றை நாம் தான் பிரித்துப் பிளந்து எடுத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

இதைத் தான் இன்றைய அறிவியல் உலகமும் சொல்கிறது. இந்த பேருண்மை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழந்த ஒரு மனிதருக்கு எப்படித் தெரியும்? படைத்த இறைவனின் வார்த்தையாக திருக்குர்ஆன் இருந்தால் மாத்திரமே இதைக் கூற முடியும்.

எனவே திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்திருக்கிறது.

சூரியனும் கோள்களும்
(இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்; நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள்; பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான்; இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் – நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான். அல்குர்ஆன் 13:2

“நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான்; இன்னும் சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தினான்” என்பதை நீர் பார்க்கவில்லையா? ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை செல்கின்றன; அன்றியும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன். அல்குர்ஆன் 31:29

அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சியெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை. அல்குர்ஆன் 35:13

இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும். இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம். சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. அல்குர்ஆன் 36:38-40

அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான்; அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான்; இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான்; சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான், இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப் பிரகாரம் நடக்கின்றது; (நபியே!) அறிந்து கொள்வீராக! அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். அல்குர்ஆன் 39:5

சூரியன் குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கிறது என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் கூறுகிறது. ஏனைய எல்லா கோள்களும் இவ்வாறே ஓடுவதாகவும் திருக்குர்அன் கூறுகிறது.

பூமி தட்டையாக இருக்கிறது என்று மனிதன் ஒரு காலத்தில் நம்பினான். பிறகு உருண்டையாக இருக்கிறது என்றான். உருண்டையாக இருக்கிற பூமி தான் இந்தக் குடும்பத்தின் மையப் பகுதி என்று கூறி, சூரியன் தான் பூமியைச் சுற்றி வருகிறது என்றான். பிறகு சூரியனைத் தான் பூமி சுற்றி வருகிறது, சூரியன் அப்படியே இருக்கிறது என்றான்.

இன்றைய அறிவியல் கண்டு பிடிப்பிற்குப் பிறகே பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது; சூரியனையும் சுற்றுகிறது; தன்னைத்தானே சுற்றுவதற்கு ஒரு நாள் என்றும், சூரியனைச் சுற்றி முடிக்கின்ற காலம் ஒரு வருடம் என்றும் மனிதன் அறிந்து கொண்டான்.

பூமி இவ்வாறு சூரியனைச் சுற்றும் போது சூரியன் என்ன செய்கிறது என்றால் அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு இந்தப் பூமியையும், தன் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற கோள்களையும் இழுத்துக் கொண்டு ஓடிக் கொண்டே இருக்கின்றது.

ஆக சூரியன் சூழன்று கொண்டே இருக்கின்றது என்பது மட்டுமல்ல; ஓடிக் கொண்டே இருக்கின்றது; அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கின்றது என்று சொல்ல வேண்டுமானால், நிச்சயம் அது இறைவனின் கூற்றாகத் தான் இருக்க முடியும்.

இந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த, எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபியால் ஒருக்காலும் சொல்லி இருக்கவே முடியாது.

இங்கே பயன்படுத்தி இருக்கின்ற வார்த்தைப் பிரயோகத்தை நேர்மையான பார்வையுடன் ஒருவர் யோசித்தால் நிச்சயமாக இது மனிதனது வார்த்தையல்ல; கடவுளின் வார்த்தை என்பதை தெளிவாக அறிந்து கொள்வார். திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்குரிய சான்றுகளில் இதுவும் ஒன்று.

ஓரங்களில் குறையும் பூமி

பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா, மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன். அல்குர்ஆன் 13:41

எனினும், இவர்களையும் இவர்களுடைய மூதாதையரையும், அவர்களுடைய ஆயுட்காலம் வளர்ந்தோங்கும் வரை சுகங்களை அனுபவிக்கச் செய்தோம்; நாம் (இவர்களிடமுள்ள) பூமியை அதன் அருகுகளிலிருந்து குறைத்து கொண்டு வருகிறோம் என்பதை இவர்கள் காணவில்லையா? இவர்களா மிகைத்து வெற்றிக் கொள்பவர்கள்? அல்குர்ஆன் 21:44

நிலப்பரப்பு சிறிது சிறிதாக கடலால் விழுங்கப்பட்டு குறைந்து வருவதை சமீப காலத்தில் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

14 நூற்றாண்டுகளுக்கு முன்பு நிலப்பரப்பு, கடலால் அரிக்கப்பட்டு அதன் ஓரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதை யாரும் அறிந்திருக்க முடியாது.

எனவே நிலப்பரப்பு ஓரங்களில் சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வருகிறது என்ற இந்த அறிவியல் கண்டுபிடிப்பு 14 நூற்றாண்டுகளுக்கு முன் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது, திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தையே என்பதற்கு இவ்வசனங்கள் தெளிவான சான்றாக அமைந்திருக்கின்றன.

தேன் எவ்வாறு உற்பத்தியாகிறது, தேனின் மருத்துவ குணம்.
உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), “பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. அல்குர்ஆன் 16:68-69

இவ்வசனத்தில் தேன் எவ்வாறு உற்பத்தியாகின்றது என்ற உண்மை கூறப்படுகிறது.
பெரும்பாலான மக்கள் இன்று கூட தேன் எப்படி உற்பத்தியாகிறது என்பதை அறிந்திருக்கவில்லை. தேனீக்கள் மலர்களிலிருந்து தேனை உறிஞ்சி வந்து கூடுகளில் சேமித்து வைக்கின்றன என்று விளங்கி வைத்திருக்கின்றனர்.

உண்மை என்னவென்றால் மலர்களிலும், கனிகளிலும் உள்ள குளுக்கோஸை, தேனீக்கள் உணவாக உட்கொள்கின்றன. உட்கொண்ட பிறகு அவற்றின் வயிற்றுக்குள் சென்ற பொருள் மாற்றமடைந்து, அதன் வயிற்றிலிருந்து வெளிப்படுகின்ற ஒரு திரவம் தான் தேன்.

இதை இன்றைய விஞ்ஞானிகள் நிரூப்பித்திருக்கின்றார்கள். தேனில் இருக்கின்ற மருத்துவக் குணத்தை எல்லா விதமான மருத்துவத் துறையினரும் ஒப்புக் கொள்கின்றனர். இது மனிதனது வார்த்தை இல்லை என்பதை மிகக் தெளிவாக உணர்த்துகின்ற வசனமாகும்.

This blog is about Islam and Islamiyar life in Nambuthalai.

h1

இறைத்தூதராகுதல் & அழைப்புப் பணி

October 3, 2011

மக்கா வாழ்க்கை

நபி (ஸல்) அவர்களுக்கு இறைத்தூதர் எனும் கௌரவம் அருளப்பட்டதற்குப் பிறகுள்ள வாழ்க்கையை இரண்டு வகைப்படுத்தலாம். அவை ஒன்றுக்கொன்று தன்மையால் மாறுபடுகிறது.

1. மக்காவில் வாழ்ந்த காலம். இது ஏறத்தாழ 13 ஆண்டுகள்.

2. மதீனாவில் வாழ்ந்த காலம். இது முழுமையாக 10 ஆண்டுகள்.

இவ்விரு வாழ்க்கையும் மாறுபட்ட பல நிலைகளைக் கொண்டிருக்கிறது. அவை ஒவ்வொன்றுக்கும் பல தனித்தன்மைகள் உண்டு. நபி (ஸல்) அழைப்புப் பணியில் கடந்து வந்த பாதைகளை ஆழ்ந்து கவனிக்கும்போது இதனை நாம் அறிகிறோம்.

மக்கா வாழ்க்கையை மூன்று கால கட்டங்களாகப் பிரிக்கலாம்.

1) மறைமுக அழைப்பு: இது மூன்று ஆண்டுகள் வரை நீடித்தது.

2) மக்காவாசிகளுக்கு பகிரங்க அழைப்பு: இது நான்காம் ஆண்டிலிருந்து ஹிஜ்ரத்” வரை தொடர்ந்தது.

3) மக்காவுக்கு வெளியே அழைப்புப் பணி: இது பத்தாம் ஆண்டின் இறுதியிலிருந்து நபி (ஸல்) அவர்களின் இறுதிக்காலம் வரைத் தொடர்ந்தது.

இவற்றைச் சுருக்கமாக பார்த்துவிட்டு மதீனா வாழ்க்கை நிலைகளை பின்னர் காண்போம்.

நபித்துவ நிழலில்

ஹிரா குகையில்

நபி (ஸல்) அவர்களுக்கு நாற்பது வயது நெருங்கியது. அவர்களது ஆழிய சிந்தனை, தனிமையை விரும்பியது. சத்துமாவையும் தண்ணீரையும் எடுத்துக் கொண்டு மக்காவிலிருந்து இரண்டு மைல் தொலைவிலுள்ள நூர் மலையின் ஹிரா குகைக்குச் செல்வார்கள். அக்குகை நான்கு முழ நீளமும் ஒன்றே முக்கால் முழ அகலமும் கொண்டது. ரமழான் மாதத்தில் அங்கு தங்கி வணக்க வழிபாடுகளிலும், இப்புவியையும் அதைத் தாண்டிய பிரபஞ்சத்தையும் இயக்கும் அபார சக்தியைப்பற்றி சிந்திப்பதிலும் ஈடுபடுவார்கள். சமுதாயம் கொண்டிருந்த இணைவைக்கும் இழிவான கொள்கையையும், பலவீனமான அதன் கற்பனைகளையும் அவர்கள் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதே நேரத்தில் மனதிருப்தியுடன் வாழ்க்கையைத் தொடர தெளிவான, நடுநிலையான வாழ்க்கைப் பாதையும் அவர்களுக்கு முன் இருக்கவில்லை.

தனிமையின் மீதான அவர்களது விருப்பம் அல்லாஹ்வின் ஏற்பாடு என்று சொல்லலாம். நபி (ஸல்) அவர்கள் இதற்கு முன் உலக அலுவல்களில் ஈடுபட்டு வந்தார்கள்; வியாபாரம் செய்து வந்தார்கள். இப்போது அவை அனைத்தையும் விட்டு தனிமையை நாடுகிறார்கள். ஏனெனில், மாபெரும் பொறுப்பைச் சுமக்க அவர்கள் தயாராக வேண்டும்; உலக வரலாற்றை மாற்றி மக்களுக்கு நேரிய பாதையைக் காட்ட ஆயத்தமாக வேண்டும். இவ்வாறு நபித்துவம் வழங்குவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தனிமையின் மீதான விருப்பத்தை அல்லாஹ் அவர்களுக்கு ஏற்படுத்தினான். ஆக மாதத்தின் பெரும் பகுதியை நபி (ஸல்) அவர்கள் தனிமையில் கழித்து வந்தார்கள். தனிமையை விசாலமான மனஅமைதியுடன் கழித்தது மட்டுமல்லாமல் இந்த பிரபஞ்சத்தை இயக்கி வரும் மறைபொருள் பற்றி ஆழமாக சிந்தித்தார்கள். ஆம்! அல்லாஹ்வின் நாட்டப்படி அம்மறைபொருளுடன் தொடர்பு கொள்ள இதோ நேரம் நெருங்கிவிட்டது. (இது குறித்து மேல் விவரங்களை ஸஹீஹுல் புகாரி, தாரீக் இப்னு ஹிஷாம் மற்றும் வரலாற்று நூல்களில் காணலாம். முதன்முதலாக அப்துல் முத்தலிப் ஹிரா குகையில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தார். ரமழானில் அங்கு சென்று தங்குவார். ஏழை எளியோருக்கு உணவளிப்பார். (இப்னு கஸீர்)

ஜிப்ரீல் வருகை

பரிபூரணத்தின் தொடக்கமாகிய 40 வயது நிறைவானபோது (பல நபிமார்களுக்கு நாற்பதாவது வயதில்தான் நபித்துவம் (நுபுவ்வத்) அருளப்பட்டது என்று சொல்லப்படுகிறது), நபித்துவ அடையாளங்கள் தெரிய ஆரம்பித்தன.

அவற்றில் சில: மக்காவிலிருந்த கல் ஒன்று அவர்களுக்கு ஸலாம் கூறி வந்தது உண்மையான கனவுகளைக் கண்டார்கள்; அவை அதிகாலையின் விடியலைப் போன்று நிதர்சனமாக நடந்து விடும்; இந்த நிலையில் ஆறு மாதங்கள் கழிந்தன நபித்துவ பணியாற்றியதோ 23 ஆண்டுகள், உண்மைக் கனவுகள் நபித்துவத்தின் 46 பங்குகளில் ஒரு பங்காகும்.

அது ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்த மூன்றாம் ஆண்டு ரமழான் மாதம். அல்லாஹ் அகிலத்தாருக்கு தனது கருணையைப் பொழிய நாடினான். முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நபித்துவத்தை வழங்கி சிறப்பிப்பதற்காக மேன்மைமிகு குர்ஆனின் சில வசனங்களுடன் வானவர் ஜிப்ரீலை அவர்களிடம் அனுப்பி வைக்கிறான்.

தெளிவான சான்றுகளை ஆராயும்போது அது ரமழான் 21வது பிறை திங்கட்கிழமை என்ற முடிவுக்கு வரலாம். (கி.பி. 610 ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி) அந்நாளில் அவர்களது வயது பிறை கணக்குப்படி மிகச் சரியாக 40 ஆண்டுகள், 6 மாதங்கள், 12 நாள்களாகும். சூரிய கணக்குப்படி 39 ஆண்டுகள், 3 மாதங்கள் 20 நாள்களாகும்.

இறை நிராகரிப்பு, வழிகேடு போன்ற அனைத்து இருள்களையும் அழித்து வாழ்க்கைக்கு ஒளிமிக்க பாதையை அமைத்துத் தந்த நபித்துவத்தின் இந்த முக்கிய நிகழ்ச்சியைப் பற்றி அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறக் கேட்போம்:

“நபி (ஸல்) அவர்களுக்கு வந்த வஹி (இறைச்செய்தி) தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளாகவே ஆரம்பத்தில் இருந்தது. அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அதிகாலையின் விடியலைப் போன்று அவை தெளிவாக அப்படியே நடக்கும். பின்னர் தனிமையை விரும்பினார்கள். ஹிரா குகையில் தனித்திருந்து பல இரவுகள் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். பிறகு தனது குடும்பத்தாரிடம் திரும்பி வருவார்கள். இதற்காக உணவையும் தம்மோடு எடுத்துச் செல்வார்கள். உணவு தீர்ந்தவுடன் கதீஜா (ரழி) அவர்களிடம் வந்து மீண்டும் உணவை எடுத்துச் செல்வார்கள். இந்த நிலையில்தான் ஹிரா குகையில் அவர்களுக்கு வஹி வந்தது. வானவர் நபியவர்களிடம் வந்து, “ஓதுவீராக!” என்றார். அதற்கவர்கள் “நான் ஓதத் தெரிந்தவனில்லையே!” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்நிலையைப் பற்றி பின்வருமாறு விவரித்தார்கள்: பிறகு அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவுக்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு “ஓதுவீராக!” என்றார். (அப்போதும்) “நான் ஓதத் தெரிந்தவனில்லையே!” என்றேன். மீண்டும் என்னை இறுகக் கட்டியணைத்துவிட்டு “ஓதுவீராக!” என்றார். (அப்போதும்) “நான் ஓதத் தெரிந்தவனில்லையே!” என்றேன். அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் கட்டியணைத்துவிட்டு,

(நபியே! அனைத்தையும்) படைத்த உங்களது இறைவனின் பெயரால் (எனது கட்டளைகள் அடங்கிய குர்ஆனை) நீங்கள் ஓதுவீராக! அவனே மனிதனை கருவிலிருந்து படைக்கின்றான். (நபியே! பின்னும்) நீங்கள் ஓதுங்கள்! உங்களது இறைவன்தான் மகா பெரும் கொடையாளி! (அல்குர்ஆன் 96 : 1-6) என்ற வசனங்களை ஓதிக் காட்டினார்.

பிறகு அந்த வசனங்களுடன் இதயம் நடுங்க (தமது துணைவியார்) கதீஜா (ரழி) அவர்களிடம் வந்து “என்னைப் போர்த்துங்கள், என்னைப் போர்த்துங்கள்” என்றார்கள். கதீஜா (ரழி) நபி (ஸல்) அவர்களைப் போர்த்தினார்கள். (நடுக்கம் தீர்ந்ததும்) கதீஜாவிடம் நடந்த செய்தியைத் தெரிவித்து விட்டுத் தமக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ எனத் தாம் அஞ்சுவதாகக் கூறினார்கள். அதற்கு கதீஜா (ரழி) “அவ்வாறு கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் உங்களை ஒருபோதும் இழிவுபடுத்தமாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) சுமைகளை சுமந்து கொள்கிறீர்கள். வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; உண்மையான சோதனைகளில் (சிக்குண்டோருக்கு) உதவி புரிகின்றீர்கள்” என்றார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களைத் தமது தந்தையின் உடன் பிறந்தவரான ‘நவ்ஃபல்’ என்பவன் மகன் ‘வரகா“விடம் அழைத்துச் சென்றார்கள்.

வரகா கிருஸ்துவராக இருந்தார். அவர் இப்ரானி (ஹிப்ரூ) மொழியை அறிந்தவர்; இன்ஜீல் வேதத்தைக் கற்றவர்; வயது முதிர்ந்தவர்; கண்பார்வையற்றவர்; அவரிடம் கதீஜா (ரழி) “என் சகோதரரே! உம் சகோதரன் மகன் கூறுவதைக் கேளுங்கள்!” என்றார். “என் சகோதரர் மகனே! நீர் எதைக் கண்டீர்!” என வரகா கேட்க, நபி (ஸல்) அவர்கள் தாம் பார்த்த செய்திகளை அவரிடம் சொன்னார்கள். அதற்கு வரகா “இவர்தாம் மூஸாவிடம் இறைவன் அனுப்பிய நாமூஸ் (ஜிப்ரீல்) ஆவார்” என்று கூறிவிட்டு, உங்களது சமூகத்தார் உங்களை உங்கள் ஊரிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருக்க வேண்டுமே என்று அங்கலாய்த்தார். நபி (ஸல்) அவர்கள் “மக்கள் என்னையா வெளியேற்றுவார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கவர் “ஆம்! நீங்கள் கொண்டு வந்திருப்பது போன்ற சத்தியத்தைக் கொண்டு வந்த எந்த மனிதரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. (நீங்கள் வெளியேற்றப்படும்) அந்நாளில் நான் உயிருடன் இருந்தால் உங்களுக்கு பலமான உதவி செய்வேன்” என்று கூறினார். இந்நிகழ்ச்சிக்குப் பின் வரகா குறுகிய காலத்தில் இறந்துவிட்டார். இத்துடன் வஹி சிறிது காலம் நின்றுவிட்டது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இறைச் செய்தி தாமதம்!

இது குறித்த பல கருத்துகள் நிலவினாலும் அந்த இடைவெளிக் காலம் சில நாட்கள் என்பதே உறுதியான கருத்தாகும். இதையே இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் வாயிலாக இப்னு ஸஅது (ரஹ்) அறிவிக்கிறார்கள். வஹியின் இடைவெளிக்காலம் மூன்று அல்லது இரண்டரை ஆண்டு என்று கூறுவது சரியானதல்ல.

அறிஞர்களின் பல்வேறு கருத்துகளை ஆய்வு செய்ததில் எனக்கு ஒன்று புலப்பட்டது. அதாவது, நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரமழான் மாதத்தில் மட்டுமே ஹிராவில் தனித்திருந்துவிட்டு ஷவ்வால் முதல் பிறையின் காலையில் வெளியேறி வீட்டுக்கு வருவார்கள். இவ்வாறு நபித்துவத்துக்கு முன் மூன்று ஆண்டுகள் தங்கினார்கள். அந்த மூன்றாவது ஆண்டின் ரமழானில் நபித்துவம் அருளப்பட்டது. புகாரி, முஸ்லிமுடைய ஹதீஸின்படி நபி (ஸல்) அவர்கள் ஹிராவில் தங்கி ரமழானை நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது இரண்டாவது வஹி அருளப்பட்டது. இதில் என் கருத்து என்னவென்றால், நபித்துவம் கிடைக்கப் பெற்ற ரமழான் முடிந்த பிறகு ஷவ்வால் மாதத்தின் முதல் பிறையில்தான் இரண்டாவது வஹி இறங்கியது. அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் ஹிராவுக்கு செல்லவில்லை. உறுதியான சான்றுகளின்படி ரமழான் பிறை 21 திங்கள் இரவில் முதல் வஹி அருளப்பட்டது. இரண்டாவது வஹி ஷவ்வாலின் முதல் பிறை வியாழன் காலை அருளப்பட்டது. ஆகவே, இக்கருத்தின்படி வஹியின் இடைவெளிக்காலம் 10 நாட்கள் மட்டுமே! இதுவே ரமழானின் கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருப்பதற்கும் ஷவ்வால் முதல் பிறை பெருநாளாக இருப்பதற்கும் காரணமாக இருக்கலாம். (அல்லாஹ்வே நன்கறிந்தவன்!)

வஹியின் இடைவெளிக் காலத்தில் நபி (ஸல்) அவர்கள் திடுக்கமும் கவலையும் நிறைந்தவர்களாகக் காணப்பட்டார்கள். இதுபற்றி ஸஹீஹுல் புகாரியில் வருவதாவது:

இரண்டாவது வஹி வருவதற்கு சிறிது காலதாமதமானது. அதனால் நபி (ஸல்) அவர்கள் கவலையடைந்தார்கள். மலை உச்சியிலிருந்து கீழே குதித்துவிட பலமுறை முனைந்தார்கள். அவ்வாறு கீழே குதித்து விடுவதற்காக ஏதேனும் மலை உச்சிக்குச் செல்லும்போதெல்லாம் அவர்களுக்கு முன்னால் ஜிப்ரீல் (அலை) தோன்றி “முஹம்மதே! நீங்கள் உண்மையாகவே அல்லாஹ்வின் தூதர்தான்” என்று கூறுவார்கள். இதைக் கேட்டதும் நபி (ஸல்) அவர்களின் பதற்றம் தணிந்து மனம் சாந்தி பெறும். பிறகு (மலை உச்சியிலிருந்து) திரும்பி விடுவார்கள். வஹி வருவது தாமதமாகும் போதெல்லாம் அவ்வாறே செய்யத் துணிவார்கள். அவர்கள் முன் ஜிப்ரீல் (அலை) தோன்றி முன்னர் போலவே கூறுவார்கள்.

மீண்டும் ஜிப்ரீல்

இப்னு ஹஜர் (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்களுக்கு அச்சம் நீங்கி வஹியின் மீது ஆர்வம் ஏற்படுத்துவதற்காகவே வஹியின் வருகையில் தாமதம் ஏற்பட்டது. அவ்வாறே அச்சம் நீங்கி ஆர்வம் ஏற்பட்டதும் வஹியை ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். அல்லாஹ் இரண்டாவது முறையாக வஹியை இறக்கி அவர்களைச் சிறப்பித்தான். (ஃபத்ஹுல் பாரி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஹிரா குகையில் ஒரு மாதம் தங்கியிருந்து பிறகு திரும்பினேன். நான் பள்ளத்தாக்கில் நடந்து கொண்டிருக்கும்போது என்னை அழைக்கும் குரலைக் கேட்டு வலப்பக்கம் பார்த்தேன். அங்கு எதையும் நான் காணவில்லை. இடப்பக்கம் பார்த்தேன், எதையும் நான் காணவில்லை. ஆகவே, என் தலையை உயர்த்திப் பார்த்தேன். அங்கு நான் ஒன்றைக் கண்டேன். ஹிரா குகையில் என்னிடம் வந்த வானவர் ஜிப்ரீல் (அலை) வானுக்கும் பூமிக்குமிடையே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். நான் கதீஜாவிடம் சென்று “என்னைப் போர்த்துங்கள்; என்னைப் போர்த்துங்கள்; குளிர்ந்த நீரை என் மீது ஊற்றுங்கள்” என்று கூறினேன். அவர்கள் என்னைப் போர்த்தி குளிர்ந்த நீரை என்மீது ஊற்றினார்கள். அப்போது இவ்வசனங்கள் அருளப்பட்டன.

(வஹியின் அதிர்ச்சியால்) போர்வை போர்த்திக் கொண்டிருக்கும் (நபியே!) நீங்கள் எழுந்து நின்று (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்! உங்கள் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள்! உங்களது ஆடையை பரிசுத்தமாக்கி வைத்துக் கொள்ளுங்கள்! அசுத்தங்களை வெறுத்து விடுங்கள்! உங்கள் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக(க் கஷ்டங்களை) நீங்கள் பொறுத்திருங்கள். (அல்குர்ஆன் 74 : 1-5)

இந்த நிகழ்ச்சி தொழுகை கடமையாவதற்கு முன் நடந்தது. இதைத் தொடர்ந்து வஹி வருவது அதிகரித்தது. (ஸஹீஹுல் புகாரி)

இவ்வசனங்கள்தான் நபித்துவத்தின் தொடக்கமாகும். இவற்றில் இருவகையான சட்டங்கள் உள்ளன.

முதலாவது வகை:

“நீங்கள் எழுந்து சென்று அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்”

என்ற வசனத்தின் மூலம் இறைத்தூதை எடுத்தியம்ப வேண்டும்; ஏற்காதவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டுமென்று நபி (ஸல்) அவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. இவ்வசனத்தின் பொருள்: வழிகேடு, அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவது, அல்லாஹ்வுக்கு இணைவைப்பது ஆகிய குற்றச் செயல்களிலிருந்து இம்மக்கள் விலகவில்லையெனில் அவர்களுக்கு அல்லாஹ்வின் வேதனை உண்டென நபியே! நீங்கள் எச்சரிக்கை செய்யுங்கள்.

இரண்டாவது வகை: அல்லாஹ்வின் கட்டளைகளை முழுமையாகப் பேணிப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் அல்லாஹ்வின் திருப்தி கிடைக்கும்; அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்பவர்களுக்கு நீங்கள் அழகிய முன்மாதியாகத் திகழ முடியும் என்று கட்டளையிடப்படுகிறது.

“உங்கள் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள்”

அதாவது அல்லாஹ்வை மட்டுமே மகிமைப்படுத்துங்கள்! அதில் எவரையும் இணையாக்காதீர்கள்.

“உங்களது ஆடைகளை பரிசுத்தமாக்கிக் கொள்ளுங்கள்”

அல்லாஹ்வை மகிமைப்படுத்தி அவன் முன் நிற்பவர் அருவருப்பான தோற்றமின்றி அசுத்தமின்றி உடலையும் உடையையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அல்லாஹ் ஆடையில் தூய்மையை இவ்வளவு வலியுறுத்தும்போது கெட்ட செயல், தீய சிந்தனையிலிருந்து நாம் எவ்வளவு தூய்மை பெற்றிருக்க வேண்டும் என்பதை சொல்லத் தேவையில்லை.

“அசுத்தங்களை வெறுத்திடுங்கள்”

அதாவது, அல்லாஹ்வை வணங்கி அவனுக்கு மாறுசெய்வதைத் தவிர்த்து அல்லாஹ்வின் கோபத்திலிருந்து தூரமாகிவிடுங்கள்.

“நீங்கள் பிரதிபலன் தேடியவராக எவருக்கும் உதவி ஒத்தாசை புரியாதீர்கள்”

அதாவது, பிறருக்கு உதவி செய்யும்போது அதற்குச் சமமான அல்லது அதைவிட அதிகமான பலனை எதிர்பார்க்காதீர்கள்.

“உங்கள் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக(க் கஷ்டங்களை) நீங்கள் பொறுத்திருங்கள்”

நபி (ஸல்) அவர்கள் தங்களது கூட்டத்தாரை அல்லாஹ்வின் பக்கம் அழைத்து அவனது தண்டனைகளைக் கூறி எச்சரிக்கை செய்கையில் அவர்களால் துன்பங்கள் நிகழலாம், அவற்றை அல்லாஹ்வுக்காக சகித்துக்கொள்ள வேண்டும் என்று இந்த இறுதி வசனத்தில் உணர்த்தப்படுகிறது.

ஆரம்பமாக அல்லாஹ்வின் அழைப்பு நபி (ஸல்) அவர்களை ஓய்வு உறக்கத்தில் இருந்து தட்டி எழுப்பி, உடலை வருத்திக்கொள்ளவும், அனல் பறக்கும் போருக்கு ஆயத்தமாகவும், எதிர்காலத்தில் சமுதாயப் புரட்சிக்கு ஈடுகொடுக்கவும், எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும் என ஒரு ராணுவ உத்வேகத்திற்கு நபி (ஸல்) அவர்களை தூண்டுகிறது. போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! எழுக! அச்சமூட்டி எச்சரிக்கை செய்க! என அழைப்பது எங்ஙனம் உள்ளது என்றால்… ஓ!… தனக்காக வாழும் ஒரு சுயநலவாதிதானே சாய்வு கட்டிலில் ஓய்வு தேடுவார். தாங்கள் அப்படிப்பட்டவரல்லவே! தாங்கள் உயர்ந்த ஒரு பணிக்கு ஆயத்தமாக வேண்டியுள்ளதே! எதிர்காலத்தில் பெரும் சமுதாயச் சுமையை தாங்கள் சுமக்க நேரிடுமே! இந்தப் போர்வை சுகத்திற்காகவா புவியில் பிறந்தீர்கள்? தங்களின் உறக்கம் உசிதமானதா? மன நிம்மதியை உள்ளம் விரும்பலாமா? சுகம் தேடலாமா? கூடாது! கூடாது! கூடவே கூடாது! உங்களை மகத்தான பொறுப்பு இரு கரம் நீட்டி வரவேற்கிறது. உம்! எழுங்கள்! உங்களுடைய பாரத்தைத் தாங்கிக் கொள்ளத் தயாராகுங்கள். சிரமத்தையும் தியாகத்தையும் ஏற்றுக்கொள்ள எழுந்து வாருங்கள்! ஓய்வெடுக்க வேண்டிய காலம் ஓடிவிட்டது. இனி கண் துஞ்சாது விழித்து போராடவேண்டும். நீங்கள் அர்ப்பணிப்புக்கு ஆயத்தமாகுங்கள்! தயாராகுங்கள்!

உண்மையில் அல்லாஹ்வின் இந்த வசனம் மிக அச்சுறுத்தலானது. இது நபி (ஸல்) அவர்களை இல்லத்தில் நிம்மதியாக படுத்துறங்குவதிலிருந்து வெளியேற்றி முழு வாழ்க்கையிலும் அழைப்புப் பணியின் சிரமங்களைச் சந்திக்கத் தயார்படுத்தியது.

அல்லாஹ்வின் இக்கட்டளையை நிறைவேற்ற நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள்! அன்று எழுந்தவர்கள் இருபது வருடங்களுக்கு மேலாக ஓய்வு பெறவேயில்லை. தனக்காகவோ தமது குடும்பத்தினருக்காகவோ இல்லாமல் அல்லாஹ்வினால் ஒப்படைக்கப்பட்ட மாபெரும் பொறுப்பின் சுமையை தனது தோளில் சுமந்து இறையழைப்புப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்கள். அவர்கள் சுமந்தது ஏகத்துவப் போராட்டத்தின் சுமையாகும். அல்லாஹ்வினால் தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை செவியேற்றதிலிருந்து 20 வருடங்களுக்கு மேலாக ஓய்வு உறக்கமின்றி மாபெரும் தியாக வாழ்க்கையை மேற்கொண்டார்கள்.

அவர்களுக்கு நம் சார்பாகவும் மனித குலத்தின் சார்பாகவும் சிறந்த நற்கூலியை அல்லாஹ் நல்குவானாக!

நபி (ஸல்) அவர்களின் நீண்ட தியாக வாழ்க்கையின் சில பகுதியைத்தான் நாம் பின்வரும் பக்கங்களில் காண இருக்கிறோம்.

வஹ்யின் வகைகள்

நபி (ஸல்) அவர்களின் நுபுவத்திற்குப் பிந்திய வாழ்வைப்பற்றி பேசுமுன் வஹியின் (இறைச்செய்தியின்) வகைகளைப் பற்றி காண்பது சிறந்தது. வஹியின் வகைகள் பற்றி இப்னுல் கய்” (ரஹ்) ‘ஜாதுல் மஆது’ என்ற தனது நூலில் கூறுவதாவது:

1) உண்மையான கனவு. இதுதான் வஹியின் தொடக்கமாக இருந்தது.

2) வானவர், நபி (ஸல்) அவர்களின் கண்முன் தோன்றாமல் உள்ளத்தில் இறை செய்தியைப் போட்டுவிடுவது. எ.கா. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரூஹுல் குத்ஸ் (ஜிப்ரீல்) எனது உள்ளத்தில் ஊதினார். அதாவது, தனது உணவை முழுமையாக முடித்துக் கொள்ளும்வரை எவரும் மரணிக்க மாட்டார். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! உணவைத் தேடுவதில் அழகிய வழியை தேர்ந்தெடுங்கள். உணவு தாமதமாகுவதால் நீங்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்து அதைத் தேட வேண்டாம். ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்விடம் உள்ளதை அவனுக்கு வழிப்படுவதன் மூலமே தவிர வேறு வகையில் அடைய முடியாது.”

3) வானவர் ஓர் ஆடவன் உருவில் தோன்றி நபி (ஸல்) அவர்களிடம் பேசுவார். அதை நபி (ஸல்) அவர்கள் மனதில் நிறுத்திக் கொள்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் தான் வானவரை சில நபித்தோழர்கள் கண்டிருக்கிறார்கள்.

4) வானவர் மணியோசையைப் போன்று வருவார். இந்த வகையே நபி (ஸல்) அவர்களுக்கு சுமையாக இருக்கும். நபி (ஸல்) அவர்களை வானவர் தன்னுடன் இணைத்துக் கொள்வார். கடுங்குளிரிலும் நபி (ஸல்) அவர்களுக்கு வியர்வை பெருக்கெடுத்து ஓடும். அவர்கள் வாகனத்தில் அமர்ந்திருந்தால் வஹியின் சுமை தாங்காது அந்த வாகனம் அப்படியே தரையில் அமர்ந்துவிடும். ஒருமுறை நபி (ஸல்) அவர்களின் கால் ஜைது இப்னு ஸாபித் (ரழி) அவர்களின் கால்மீது இருந்த நிலையில் வஹி வந்தது. அதன் சுமை அவர்களது காலைத் துண்டித்து விடும் அளவுக்கு மிகக் கடினமாக இருந்தது.

5) வானவர், அல்லாஹ் படைத்த அதே உருவத்தில் நபி (ஸல்) அவர்கள் முன் தோன்றுவார். நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வின் செய்திகளை அறிவிப்பார். இவ்வாறு இரண்டு முறை நடந்துள்ளது. இதைப்பற்றி குர்ஆனில் ‘அந்நஜ்ம்’ என்ற அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.

6) நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேல் அழைத்து பேசுவது. நபி (ஸல்) அவர்களுக்கு மிஃராஜில்” தொழுகை கடமையாக்கப்பட்டது போன்று!

7) வானவரின்றி நேரடியாக அல்லாஹ் பேசுவது. மூஸா (அலை) அவர்களிடம் அல்லாஹ் பேசியது போல! மூஸா நபிக்கு இந்த சிறப்பு கிடைத்தது பற்றி குர்ஆனில் விவரிக்கப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்களுக்கும் இந்த சிறப்பு கிடைத்தது என மிஃராஜ் தொடர்பான ஹதீஸ்களின் மூலம் தெளிவாகிறது. (ஜாதுல் மஆது)

This blog is about Islam and Islamiyar life in Nambuthalai.

h1

அல்குர்ஆன் அருளப்பட்ட வரலாறு

September 27, 2011

திருக்குர்ஆனை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சுயமாகத் தயாரிக்கவில்லை; இறைவன்தான் வழங்கினான் என்றால் எந்த வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்ற கேள்விக்கான விடையையும் அறிந்து கொள்வது அவசியம்.

நபிகள் நாயகத்துக்கு முன் ஏராளமான இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டனர். இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்கள் வரிசையில் இறுதியானவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்பது தான் இஸ்லாமிய நம்பிக்கை.

முதல் மனிதராகிய ஆதம் முதல் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வரை எத்தனை தூதர்கள் வந்துள்ளனர் என்று குர்ஆன் கூறாவிட்டாலும் ஏராளமான தூதர்கள் அனுப்பப்பட்டதாகக் கூறுகிறது.

நபிகள் நாயகத்துக்கு முன் அனுப்பப்பட்ட தூதர்கள் குறிப்பிட்ட மொழியினருக்கோ, குலத்தினருக்கோ, சமுதாயத்தினருக்கோ அனுப்பப்பட்டனர். அவரவர் மொழியில் மக்களை நல்வழிப்படுத்த அவர்களுக்கு இறைவன் வழங்கிய செய்தியே வேதம் எனப்படும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு முன் இருந்த எல்லா மொழிகளிலும் இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். அல்குர்ஆன் 14:4.

இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்களில் இறுதியானவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அவர்களுக்குப் பின் உலகம் அழியும் காலம் வரை இறைத் தூதர்கள் அனுப்பப்பட மாட்டார்கள். (பார்க்க அல்குர்ஆன் 4:79, 4:170, 7:158, 9:33, 10:57, 10:108, 14:52, 21:107, 22:49, 25:1, 33:40, 34:28, 62:3)

மற்ற இறைத் தூதர்கள் போல் குறிப்பிட்ட சமுதாயத்துக்கோ, குறிப்பிட்ட மொழியினருக்கோ அன்றி அகில உலகுக்கும் இறைத் தூதராக அனுப்பப்பட்டவர்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.

அவர்களுக்கு வழங்கப்பட்ட குர்ஆன் எனும் வேதத்துக்குப் பின் உலகில் வேறு வேதம் ஏதும் அருளப்படாது என்பதால் குர்ஆன் இறுதி வேதம் எனப்படுகிறது.

உலகம் முழுவதற்கும் வழிகாட்ட அருளப்படும் வேதம் அரபு மொழியில் ஏன் அருளப்பட வேண்டும் என்று சிலர் கருதலாம்.

அரபு மொழிதான் தேவமொழி என்பதோ அதுதான் உலகிலேயே உயர்ந்த மொழி என்பதோ இதற்குக் காரணம் அல்ல. எல்லா மொழிகளும் சமமானவை என்றே இஸ்லாம் கூறுகிறது மொழியின் அடிப்படையில் எவரும் உயர்வு தாழ்வு கற்பிக்கக் கூடாது என்பதும் இஸ்லாத்தின் கொள்கை.

இஸ்லாம் அரபு மக்களுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழி பேசுவோருக்காகவும் அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும். பல்வேறு மொழி பேசும் மக்களுக்கு ஒரு வழிகாட்டு நெறியைக் கொடுத்து ஒரு வழிகாட்டியை அனுப்பும் போது ஏதாவது ஒரு மொழியில் தான் கொடுத்தனுப்ப முடியும் எந்த மொழியில் அந்த வழிகாட்டு நெறி இருந்நாலும் மற்ற மொழியைப் பேசுவோர் இது குறித்து கேள்வி எழுப்புவார்கள்.

யாராலும் எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாதவாறு இதற்கு ஒரு ஏற்பாடு செய்ய முடியாது. அரபு மொழிக்குப் பதிலாக தமிழ் மொழியில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டிருந்தால் இதே கேள்வியை மற்ற மொழி பேசும் மக்கள் கேட்காமல் இருக்க மாட்டார்கள்.

எனவே உலக ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு செய்யப்படும் காரியங்களில் மொழி உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து உலக ஒருமைப்பாட்டைச் சிதைத்து விடக் கூடாது.

நாம் வாழ்கின்ற இந்திய நாட்டில் பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் நமது நாட்டிற்கு ஒரு தேசிய கீதத்தை வங்காள மொழியில் உருவாக்கி அதை அனைத்து மொழியினரும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு ஏற்றுக் கொண்டிருப்பதால் இந்தியாவிலேயே முதன்மையான மொழி வங்காள மொழி தான் என்றோ மற்ற மொழிகள் தரம் குறைந்தவை என்றோ ஆகாது.

நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக மொழி உணர்வை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு, அந்நிய மொழியை ஏற்றுக் கொள்ளும்போது உலக ஒருமைப்பாட்டுக்காகவும் உலக மக்கள் அனைவரும் ஒரே நல்வழியை நோக்கி திரும்ப வேண்டும் என்பதற்காகவும் மிகச் சில விசயங்களில் மொழி உணர்வை ஒதுக்கி வைப்பதால் மனிதகுலத்துக்கு எந்தக் கேடும் ஏற்படாது மாறாக உலகளாவிய ஒற்றுமை எனும் மாபெரும் நன்மை தான் ஏற்படும்.

ஏதாவது ஒரு மொழியில் தான் உலகளாவிய ஒரு தலைவரை அனுப்ப முடியும் என்ற அடிப்படையில் தான் நபிகள் நாயத்திற்குத் தெரிந்த அவர்களுடைய தாய் மொழியான அரபு மொழியில் குர்ஆன் அருளப்பட்டது. உலகிலேலே அரபு மொழி தான் சிறந்த மொழி என்பதற்காக அரபு மொழியில் குர்ஆன் அருளப்படவில்லை.

குர்ஆன் எவ்வாறு அருளப்பட்டது?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்போது எவ்வாறு இறைத் தூதராக நியமிக்கப்பட்டார்கள்? என்பதையும் எவ்வாறு குர்ஆன் அருளப்பட்டது என்பதையும் நாம்தெரிந்து கொள்வது அதிகம் பயனளிக்கும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இயற்பெயர் முஹம்மத். இவர்கள் இன்றைய சவூதி அரேபியாவில் உள்ள மக்கா எனும் நகரத்தில் கி.பி. 570ம் ஆண்டு பிறந்தார்கள்.

தாயின் வயிற்றில் இருக்கும் போது தந்தையை இழந்து, சிறு வயதிலேயே தாயையும் இழந்தார்கள். பெற்றோரை இழந்த பின் அவர்களின் தந்தை வழி பாட்டனார் அப்துல் முத்தலிப் என்பார் தமது பொறுப்பில் அவர்களை எடுத்து வளர்த்து வந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு அவர்களின் பெரிய தந்தை அபூதாலிபுடைய பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வளர்ந்து இளமைப் பருவத்தை அடைந்தார்கள்.

சிறுவராக இருந்த போது ஆடு மேய்த்திருக்கிறார்கள். ஓரளவு விபரம் தெரியவந்த பிறகு தமது பெரிய தந்தையோடு சேர்ந்து வியாபாரமும் செய்திருக்கிறார்கள்.
இந்த வியாபாரத்தின் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல வெளியூர் பயணங்களை மேற்கொண்டார்கள்.

25-வது வயதில் தம்மை விட மூத்தவரான கதீஜா என்ற விதவையை மணந்தார்கள். அவரும் அன்றைய சமுதாயத்தில் பெரிய வசதி படைத்தவராக இருந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது 25ம் வயதிலேயே மிகவும் வசதி படைத்தவராக மாறினார்கள்.

குர்ஆன் அருளப்பட்ட காலகட்டம்

  • நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்கள் பல கடவுள் நம்பிக்கையுடையோராக இருந்தார்கள். ஏராளமான மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்தனர்!
  • கடவுளை நிர்வணமாக வழிபட்டனர்!
  • பெண் குழந்தைகள் பிறப்பதைக் கேவலமாகக் கருதியதுடன் பெண் குழந்தை பிறந்தால் அதை உயிருடன் புதைப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்!
  • குடம் குடமாக மது பானங்கள் அருந்தினார்கள்!
  • காமக் களியாட்டத்தில் மூழ்கித் திளைத்தனர்!
  • பெண்களை ஆடு மாடுகளைப் போன்று கருதினார்கள்!
  • தந்தை இறந்துவிட்டால் தந்தையின் மனைவியை மகன் பயன்படுத்திக் கொள்வது சர்வ சாதராணமாக இருந்தது!
  • சாதி வேற்றுமையும் தலை விரித்தாடியது!
  • நபிகள் நாயகம் எந்தக் குலத்தில் பிறந்தார்களோ அந்தக் குலம் – குறைஷிக் குலம் – மிகவும் உயர்ந்த குலம் எனவும் மற்றவர்கள் அற்பமானவர்கள் எனவும் விதி செய்திருந்தனர்!
  • அரபு மொழிதான் ஒரே மொழி என்றும், மற்ற மொழி பேசுவோர் அஜமிகள்(கால்நடைகள்) என்று கூறும் அளவுக்கு அவர்களிடம் அரபு மொழி வெறி மிகைத்திருந்தது.
  • மனித உயிர்களைக் கொன்று குவிப்பது மிகச் சிறிய குற்றமாகக் கூட அவர்களுக்குத் தோன்றவில்லை. அற்பமான சண்டைகளுக்காகக் கூட கொலை செய்வார்கள்.!
  • தமது குடும்பத்தில் ஒருவர் கொல்லப்பட்டால் கொலையாளியைப் பழி வாங்காது விட மாட்டார்கள். அவரைத் தம்மால் பழிவாங்க முடியாவிட்டால் தமது வாரிசுகளுக்கு வலியுறுத்திச் செய்வார்கள். பத்து தலைமுறைக்குப் பிறகாவது கொலையாளியின் குடும்பத்தில் ஒருவனைக் கொன்று கணக்குத் தீர்ப்பார்கள்.

இத்தகைய நிலையைக் கண்டு மனம் வெறுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சமுதாயத்தின் நடவடிக்கைகள் சரியானவை அல்ல என்று திட்டவட்டமாக உணர்ந்தார்கள்.

எனவே தமது நாற்பதாம் வயதில் மக்காவிற்கு வெளியே உள்ள ‘ஹிரா’ எனும் குகைக்குச் சென்று தனிமையில் சிந்திப்பதை வழக்கமாகக் கொள்ளலானார்கள்.

பல நாட்களுக்குத் தேவையான உணவைத் தயார் செய்து கொண்டு குகையிலேயே தங்கி விடுவார்கள். உணவு முடிந்ததும் வீட்டுக்கு வந்து உணவு தயாரித்துக் கொண்டு மறுபடியும் குகைக்குச் சென்று விடுவார்கள்.

இவ்வாறு குகையில் இருந்த போது தான் வானத்தையும், பூமியையும் தொட்டுக் கொண்டிருக்கும் அளவுக்கு பிரம்மாண்டமான தோற்றத்தில் ஒருவர் நிற்பதைக் காண்டார்கள்.

அவர் நபிகள் நாயகத்தை இறுகக் கட்டியணைத்து ‘ஓது’ எனக் கூறிய போது தமக்கு ஓதத் தெரியாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மீண்டும் அவர் ‘ஓது’ எனக் கூற அப்போதும் தெரியாது என்று பதிலளித்தார்கள். பின்னர் அவர் நபிகள் நாயகத்தை இறுகக் கட்டியணைத்து “படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக” என்று தொடங்கும் சில வார்த்தைகளைக் கூறினார். (இது 96வது அத்தியாயத்தில் முதல் ஐந்து வசனங்களாக இடம் பெற்றுள்ளது. பார்க்க அல்குர்ஆன் 96:1-5)

இப்படித் தான் நபிகள் நாயகம் இறைத் தூதராக நியமிக்கப்பட்டு முதல் செய்தியும் அருளப்பட்டது. ஆனாலும் நபிகள் நாயகம் அவர்கள் அதிர்ச்சியடைந்து அச்சம் கொண்டார்கள். தமது மனைவியிடம் வந்து இதைக் கூறினார்கள்.

“இறைவன் உங்களைக் கைவிட மாட்டான்; மக்களுக்கு நீங்கள் உதவுகிறீர்கள்; ஏழைகளுக்கு வாரி வழங்குகிறீர்கள்; உறவினர்களை உபசரிக்கிறீர்கள்; எனவே அல்லாஹ் உங்களைக் கைவிட மாட்டான்” என்றெல்லாம் அவர்களின் மனைவி கதீஜா அவர்கள் ஆறுதல் படுத்தினார்கள்.

ஆயினும் தமது ஆறுதல் போதிய பயனளிக்காததைக் கண்டு தமது உறவினர் வரகாவிடம் நபிகள் நாயகத்தை அழைத்துச் சென்றார்கள். இவர் முந்தைய வேதங்களைக் கற்றறிந்து, கிறித்தவ மார்க்கத்தையும் தழுவியிருந்தார்.

“நீர் இறைவனின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளீர்” உம்மை உமது சமுதாயத்தினர் ஊரை விட்டே வெளியேற்றும் நிலையை அடைவீர்; ஏனெனில் இறைத் தூதர்கள் பிரச்சாரம் செய்யும் போது இது தான் நடந்துள்ளது என்றெல்லாம் அவர் கூறி நம்பிக்கையூட்டினார். (நூல்: புகாரி-2)

இப்படி ஆரம்பித்த இறைச் செய்தியின் வருகை சிறிது சிறிதாக சந்தர்ப்பத்துக்கு ஏற்ப 23 ஆண்டுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. 23 ஆண்டுகளில் சிறிது சிறிதாக அருளப்பட்ட இறைச் செய்தியின் தொகுப்பே திருக்குர்ஆன்.

This blog is about Islam and Islamiyar life in Nambuthalai.

h1

குர்ஆனின் முன்னறிவிப்புகள்

September 22, 2011

Quranகஃபா (அபய பூமி) :

(இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை – மகாமு இப்ராஹீமை – தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்” என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம். அல்குர்ஆன் 2:125

அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) – நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான். அல்குர்ஆன் 3:97

நினைவு கூறுங்கள்! “என் இறைவனே! இந்த ஊரை (மக்காவை சமாதானமுள்ளதாய்) அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக! என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!” என்று இப்ராஹீம் கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூறும்). அல்குர்ஆன் 14:35

உலகில் முதன் முதலில் இறைவனை வணங்குவதற்காக எழுப்பபட்ட ஆலயம் கஃபா. இந்த ஆலயம் மக்களின் அபய பூமியாகத் திகழும் எனத் திருக்குர்ஆன் கூறுகிறது.

கஃபா, அபய பூமி என அறிவிக்கப்பட்டு 14 நூற்றாண்டுகளைக் கடந்து பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபய பூமியாகவே அமைந்துள்ளது. 14 நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயமாயகவும் அது இருந்து வருகிறது. திருக்குர்ஆன் கூறியவாறு அது அபய பூமியாகவே நீடித்து வருவது திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தாம் என்பதற்கச் சான்றாக அமைந்துள்ளது.

மனிதர்களால் நபிகள் நாயகத்தை கொல்ல முடியாது:

தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராகமாட்டீர்; அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்; நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். அல்குர்ஆன் 5:67

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்றைய சமுதாயத்தில் இருந்த அனைத்துத் தீமைகளையும் தைரியமாக எதிர்த்ததால் ஏரளமான எதிரிகளைச் சம்பாதித்து வைத்திருந்தனர். அவர்களை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று பல வகையிலும் முயற்ச்சிகள் நடந்தன.

அவர்கள் கோட்டை, கொத்தளங்களில் ஒளிந்து கொண்டிருக்கைவில்லை. குடிசையில் தான். வசித்தார்கள். வாயிற் காப்போன் யாரும் இருக்கவில்லை. வீதியில் சாதரணமாக நடமாடினார்கள். உயிரைக் காக்க எந்த முயற்சியும் மேற்க்கொள்ளவில்லை. எந்தக் கொள்கையிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை.

போர்க் களங்களிலும் பங்கெடுத்து, கொல்லப்படுவதற்கான வாய்ப்பை தாமாகவே எதிரிகளுக்கு வழங்கினார்கள். ஆனாலும் அவர்களை யாரும் கொல்ல முடியவில்லை. “உம்மை இறைவன் காப்பான்” என்ற இந்த முன்னறிவிப்பு நிறைவேறியது.

இப்படி அறை கூவல் விட்டதை முறியடிப்பதற்காகவாவது எதிரிகள் அவரைக் கொன்றிருந்தால் இது பொய்யான மார்க்கம் என்று நிருபித்திருப்பார்கள். ஆனாலும் இயலவில்லை.

இது இறைவனது வார்த்தையாகவும், உத்தரவாதமாகவும் இல்லாதிருந்தால் அவர்கள் என்றோ கொல்லப்படாதது திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்கான நிருபணம்.

என்னை எவரும் கொல்ல முடியாது என்று அறிவித்து விட்டு, சர்வ சாதரணமாக உலகில் எவரும் நடமாட முடியாது. அதுவும் தீய சக்திகளை எதிர்த்து போரிடுபவர் இப்படி அறிவித்தால் அடுத்த நாளே அவரது கதை முடிக்கப்பட்டு விடும்.

அன்றைய நிலையில் இவரைப்போல் சர்வ சாதாரணமாக எவ்விதப் பாதுகாப்பு ஏற்பாடுமின்றி மக்களோடு மக்களாக பழகும் ஒருவரை எளிதாகக் கொல்ல முடியும். ஆனாலும் தன்னைக் கொல்ல முடியாது என்று அறிவித்து, தாம் கூறுவது இறைவாக்கு என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிருபித்தார்கள்.

பாதுகாக்கபட்ட ஃபிர்அவ்னின் உடல் :

எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது). அல்குர்ஆன் 10:92

திருக்குர்ஆன் அருளப்பட்டு பல நூற்றாண்டுகள் கழிந்த பின் ஃபிர்அவ்னின் உடலைக் கண்டெடுத்து எகிப்து அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர்.

ஃபிர்அவ்ன் மட்டுமின்றி அவனது படையினர் முழுவதும் மூழ்கடிக்கப்பட்டிருந்தும் திருக்குர்ஆன் கூறியவாறு அவனது உடல் மட்டும் மீட்கப்பட்டது. திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதை நிருபிக்கும் சான்றாகும். பார்க்க

நவீன வாகனங்கள் பற்றிய முன்அறிவிப்பு:

இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான். அல்குர்ஆன் 16:8

இவ்வசனத்தில் மனிதர்கள் அன்றைக்குப் பயன்படுத்தி வந்த குதிரை, கோவேறுக் கழுதை, கழுதை ஆகிய வாகனங்களைக் குறிப்பிட்டு விட்டு, நீங்கள் அறியாதவற்றை இனி படைப்பான் என்று கூறப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்க்குப் பின் எத்தனையோ விதமான வாகனங்கள் படைக்கப்படவிருப்பதை முன் கூட்டியே அறிவிப்பதாக இது அமைந்துள்ளது. திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தைதான் என்பதற்கு இதையும் சான்றாகக் கொள்ளலாம்.

நபிகள் நாயகத்தின் (ஸல்) எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள்:

(நபியே!) உம்மை (உம்முடைய) பூமியிலிருந்து அடி பெயரச்செய்து, அதை விட்டும் உம்மை வெளியேற்றிவிட முனைகிறார்கள்; ஆனால் அவர்களோ உமக்குப்பின்னர் சொற்ப நாட்களேயன்றி (அங்கு) தங்கியிருக்க மாட்டார்கள். அல்குர்ஆன் 17:76

அதிசீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர். அல்குர்ஆன் 54:45

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தபோது இறுதி வெற்றி நபிகள் நாயகத்திற்கே கிடைக்கும், இவர்கள் புறங்காட்டி ஓடுவார்கள் என்று கூறப்படுகிறது.
வெற்றி பெறுவார்கள் என்பதற்க்கு எந்த அறிகுறியும் இல்லாத அந்தக் கால கட்டத்தில் இறைவனின் இந்த அறிவிப்பு சில வருடங்களிலேயே உண்மைப்படுத்தப்பட்டது.

திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்குரிய சான்றுகளில் இதுவும் ஓன்றாகும்.

ரோம் சாம்ராஜ்யம் சில ஆண்டுகளில் வெற்றி பெறும்:

ரோம் தோல்வியடைந்து விட்டது. அருகிலுள்ள பூமியில்; ஆனால் அவர்கள் (ரோமர்கள்) தங்கள் தோல்விக்குப்பின் விரைவில் வெற்றியடைவார்கள். சில வருடங்களுக்குள்ளேயே! (இதற்கு) முன்னும், (இதற்கு) பின்னும், (வெற்றி தோல்வி குறித்த) அதிகாரம் அல்லாஹ்வுக்குத்தான்; (ரோமர்கள் வெற்றி பெறும்) அந்நாளில் முஃமின்கள் மகிழ்ச்சியடைவார்கள். அல்லாஹ்வின் உதவியினால் (வெற்றி கிடைக்கும்); அவன்தான் நாடியவர்களுக்கு உதவி புரிகிறான் – மேலும், (யாவரையும்) அவன் மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன். இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும்; அல்லாஹ் தன் வாக்குறுதியில் தவறமாட்டான். ஆனால், மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். அல்குர்ஆன் 30:2-5

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருக்கும் போது இரு வல்லரசுகள் இருந்தன. ஓரு வல்லரசு கிறித்தவர்கள் ஆளுகையிலிருந்த ரோமாபுரி சாம்ராஜ்யம். இன்னொரு வல்லரசு நெருப்பை வணங்கிக் கொண்டிருந்த பாரசீகர்களின் சாம்ராஜ்யம்.

நபிகள் நாயகத்தின் (ஸல்) அவர்களின் காலத்தில் இவ்விரு வல்லரசுகளும் மோதிக் கொண்ட போது ரோமாபுரி தோற்கடிக்கபட்டது. இதை நபிகள் நாயகத்தின் எதிரிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.
முஹம்மதைப் போலவே தங்களிடம் வேதம் இருக்கிறது என்று கூறிக் கொள்ளும் ரோமாபுரி சாம்ராஜ்யம் வீழ்ந்து விட்டது. நம்மைப் போலவே பல கடவுள்களை நம்பும் சமுதாயம் வெற்றி பெற்று விட்டது. எனவே முஹம்மதை நாம் தான் மிகைப்போம் என்று நபிகள் நாயகத்தின் எதிரிகள் பேசிக் கொண்டனர்.

அப்போது தான் மிகச் சில ஆண்டுகளில் ரோமாபுரி வெற்றி பெறும்; பாரசீகம் தோற்று ஓடும் என்று இவ்வசனங்கள் முன்னறிவிப்புச் செய்தன.

இந்த முன்னறிவிப்பின் படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலேயே ரோமாபரி வெற்றி, பாரசீகம் தோற்கடிப்பட்ட அதிசய நிகழ்ச்சியும் நடந்தேறியது. திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு மற்றொரு சான்றாக இது திகழ்கிறது.

மக்காவை நபிகள் நாயகம் வெற்றி கொள்வார்கள்:

(நபியே!) நிச்சயமாக எவன் இந்த குர்ஆனை உம்மீது விதியாக்கினானோ, அவன் நிச்சயமாக உம்மைத் திரும்பிக் கொண்டு வந்து (மக்காவென்னும்) அம்மீளும் தலத்தில் சேர்ப்பிப்பான்; என் இறைவன் நேர்வழியைக் கொண்டு வந்திருப்பவர் யார், வெளிப்படையான வழிகேட்டில் இருப்பவர் யார் என்பதை நன்கறிந்தவன்” என்று நீர் கூறுவீராக. அல்குர்ஆன் 28:85

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுகின்ற நிலைக்கு தள்ளப்பட்டு வெளியேறினார்கள்.

இப்படி வெளியேற்றப்படும் ஒருவர் “வெளியேற்றிய ஊருக்கு வந்து அதை ஆள்வார்; அவருக்குச் சாதகமான நிலை ஏற்படும்” என யாரும் கற்பனை கூட செய்ய முடியாது.

ஆனால் இவ்வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு மதீனாவிற்குப் புறப்பட்டதைப் பற்றிப் பேசும் போது எந்த இடத்தை விட்டு விரட்டினார்களோ அந்த இடத்திற்குக் கொண்டு செல்வேன் என்று முன்னறிவிப்பு செய்கிறது. இந்த முன்னறிவிப்பை உலகறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொன்னார்கள்.

சில வருடங்களிலேயே விரட்டப்பட்ட ஊருக்குச் சென்று அதை வெற்றி கொண்டு அவ்வூரைத் தம் வசப்படுத்திய இந்த நிகழ்ச்சியை, விரட்டப்படும் போதே திருக்குர்ஆன் முன்னறிவிப்பாகச் சொல்லியிருப்பது திருக்குர்ஆன் இறை வேதம் தான் என்பதற்கு மற்றொரு சான்றாக எடுத்துக் கொள்ளலாம்.

அபூலஹபின் அழிவு:

அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக; அவனும் நாசமாகட்டும். அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை. விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான். விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ, அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்). அல்குர்ஆன் 111:1-5.

இந்த அத்தியாயம் நபிகள் நாயகத்தின் பெரிய தந்தையும், நபிகள் நாயகத்தின் முக்கிய எதிரியுமான
அபூலஹபின் அழிவைப் பற்றி பேசுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) ஆரம்பத்தில் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்த போது நபிகள் நாயகத்தின் மீது மண்ணை வாரி வீசிய அபூலஹப் “இதற்காகத் தான் எங்களை அழைத்தாயா? நீ நாசமாகப் போ!” என்று கூறி தூற்றினான். அவனைக் கண்டிக்கும் விதமாகவே இந்த அத்தியாயம் அருளப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலேயே அவனும், அவனுடைய மனைவியும், குடும்பத்தினரும் முழுமையாக அழிக்கப்பட்டு தடயமே இல்லாமல் ஆக்கப்பட்டார்கள்.

இதில் மிக முக்கியமான ஒரு முன்னறிவிப்பும் அடங்கியுள்ளது. “அபூலஹப் இஸ்லாத்தை ஏற்க மாட்டான். நரகத்திற்கே செல்வான்” என்று இந்த அத்தியாயம் பிரகடனம் செய்கிறது.

இஸ்லாத்தை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த அபூலஹப் இந்த அத்தியாயத்தைப் பொய்யாக்குவதற்காகவேனும் தானும் இஸ்லாத்தில் இணைவதாக நடித்திருக்கலாம். அவ்வாறு நடித்து இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டவாறு நிறைறேவில்லை. எனவே, முஹம்மது பொய்யர் என்று நிருபித்திருக்கலாம். ஆனால், கடைசி வரை அபூலஹப் எதிரியாகவே மரணித்திருப்பது இது இறைவனின் வேதம் என்பதற்கு சான்றாகும்.

உலகின் பல பகுதிகளிலிருந்து கனிகள் மக்காவிற்கு வந்து சேரும்:

இன்னும் அவர்கள்: “நாங்கள் உம்முடன் சேர்ந்து இந்நேர் வழியை (குர்ஆனை) பின்பற்றுவோமானால் எங்கள் நாட்டைவிட்டு நாங்கள் தூக்கி எறியப்படுவோம்” என்று கூறுகிறார்கள்; நாம் அவர்களைச் சங்கையான இடத்தில் பாதுகாப்பாக வசிக்கும்படி வைக்கவில்லையா? அவ்விடத்தில் ஒவ்வொரு வகைக் கனிவர்க்கமும் நம்மிடமிருந்துள்ள உணவாகக் கொண்டுவரப்படுகிறது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள். அல்குர்ஆன் 28:57

இன்றைய மக்கா நகரம், நபிகள் நாயகம் காலத்திலும், அதற்கு முன்னரும் எவ்வித கனி வர்க்கமும் முளைக்காத பாலைவனப் பெருவெளியாகும்.

இந்த பாலைவனப் பெருவெளிக்கு உலகத்தின் பல பாகங்களிலிருந்து கனிகள் கொண்டு வரப்படும் என திருக்குர்ஆன் முன்னறிவிப்பு செய்கிறது. இந்த முன்னறிவிப்பு நிறைவேறியதை ஹஜ்ஜுக்குச் செல்லும் ஒவ்வொருவரும் கண்கூடாகக் காணமுடியும்.

உலகத்தில் உள்ள எல்லா விதமான கனி வகைகளும் அந்த மக்களை நோக்கிக் கொண்டு செல்லப்படுகின்ற காட்சியை உலகம் இன்றைக்கும் பார்த்துக் கொண்டிருக்கிறது.
திருக்குர்ஆன் இறை வேதம் என்ற சான்றுகளில் இதுவும் ஒன்றாகும்.

விண்வெளிப் பயணம்:

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?. “மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது.” அல்குர்ஆன் 55:32-33

இவ்வசனம் விண்ணுலகம் வரை மனிதன் பயணம் மேற்கொள்ள முடியும் என்று தெளிவாகச் சொல்கிறது. அதே நேரத்தில் அது எவ்வாறு சாத்தியமாகும் என்பதற்கான வழிகளையும் சொல்கிறது.
ஒரு ஆற்றலை உருவாக்கிக் கொள்வதன் மூலமாகவே தவிர நீங்கள் இந்த எல்லைகளையெல்லாம் கடக்க இயலாது என்றும் கூறுகிறது.

விண்ணில் பறக்க முடியுமா? என்பதைக் கற்பணை செய்து கூட பார்திராத அந்த சமுதாயத்தில் முடியும் என்பதையும், அதற்கென ஒரு ஆற்றல் தேவை என்பதையும் கூறி, இறை வேதம் தான் என்று திருக்குர்ஆன் தன்னை நிரூபித்துக் கொள்கிறது.

This blog is about Islam and Islamiyar life in Nambuthalai.

h1

குர்ஆனின் அத்தாட்சிகள்

September 22, 2011

ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித சமுதாயத்தை நேரான பாதையில் கொண்டுசெல்ல அல்லாஹ்விடம் இருந்து வேதங்கள் திருதூதர்கள் வழியாக அளிக்கப்பட்டு கொண்டு இருந்தன. ஏழாவது நூற்றான்டில் வேதங்களின் இறுதியாக இறுதி நாள் வரை உள்ள மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட வேதம்தான் திருக்குர்ஆன் ஆகும்.

அறிவியல் முன்னேற்றத்தால் மனிதனின் வளர்ச்சி அதிகமாக இருந்தாலும், திருக்குர்ஆனின் எந்தவொரு கருத்தும் தவறானது என்று இதுவரை எவராலும் நிருபிக்க முடியவில்லை.

அதைப்போல் குர்ஆனில் கூறப்பட்ட வரலாற்று செய்திகள் நூறு சதவீதம் உண்மையானது என்பதை இப்பூமியில் பயணம் சென்றால் நம்மால் உணர முடியும். பூமியில் பயணம் செய்து கடந்த கால வரலாற்றை படித்து படிப்பினை பெற திருக்குர்ஆன் நமக்கு கட்டளையிடுகிறது.

பூமியில் பிராயாணம் செய்து, குற்றவாளிகளின் முடிவு என்னவாயிற்று என்று பாருங்கள்” என்று (அவர்களிடம் நபியே!) நீர் கூறுவீராக. அல்குர்ஆன் 27:69

ஆதம் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் முதல் முஹம்மது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸ்ஸலாம் வரை உள்ள வரலாற்று நிகழ்ச்சிகள் இங்கு தொகுக்கப் பட்டுள்ளன.

1. ஆதம் அலைஹி வஸ்ஸலாம்
2. நூஹ் அலைஹி வஸ்ஸலாம்
3. ஆது சமுதாயத்தினரும் ஹூது நபியும்
4. ஸாலிஹ் அலைஹி வஸ்ஸலாம்
5. இப்ராஹீம் அலைஹி வஸ்ஸலாம்
6. லூத் அலைஹி வஸ்ஸலாம்
7. யூஸுஃப் அலைஹி வஸ்ஸலாம்
8. ஷுஐப் அலைஹி வஸ்ஸலாம்
9. மூஸா அலைஹி வஸ்ஸலாம்
10. ஃபிர்அவ்ன்
11. காரூன்
12. பல்கீஸ் ராணி 
13. மஆரிப் அணைக்கட்டு
14. குகைவாசிகள்
15. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம்
16. பத்ரு
17. உஹது
18. கந்தக் – அகழ்ப்போர்
19. கைபர்
20. முஅத்தா போர்
21. மக்கா வெற்றி
22. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் மறைவு

திருக்குர்ஆனையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கையையும் முன்மாதிரியாக வைத்து உங்கள் வாழ்கையை சரிசெய்து கொள்ளுங்கள். அதுமட்டும்தான் இவ்வுலகத்தில் சாந்தியையும் சமாதானத்தையும் மறுமையில் சொர்கத்தையும் அடைவதற்க்கான ஓரே வழி.

This blog is about Islam and Islamiyar life in Nambuthalai.

h1

குர்ஆன்

August 3, 2011

நோன்பு காலங்களில் அதிகமாக குர்ஆன் படியுங்கள். 

This blog is about Islam and Islamiyar life in Nambuthalai.

Follow

Get every new post delivered to your Inbox.